பலரின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாய் மாற
சிலரின் முகங்களில் சிறு புன்னகை பூக்க
ஆரம்பமே அழிவினில் முடிந்த என்னை போன்ற சிலரின்
மத்தியில், விதியினை வென்று
இவ்வுலகினில் ஜீவித்தேன் நான்
சில வருடங்கள் மகிழ்ச்சியாய் சுற்றி திரிந்த
என் வாழ்வினில் வந்தது அந்த மாற்றம்,
அன்று என்னுள் ஏற்பட்ட அந்த வலி என் வாழ்வினை
நான்கு சுவற்றினுள் அடைக்கும் என்று நான் அறியேன்
அன்று வரை சுதந்திரமாய் சுற்றி திரிந்த கால்களுக்கு
சில உடைகளை கூடுதலாய் கொடுத்து விளங்கிட்டனர்
ஒன்றாய் அடித்து பிடித்து விளையாடிய நண்பர்களை
தூரமாய் நின்று பார்ப்பதற்கு கூட தடை.
ஏன் எதற்கு என்ற கேள்விகளுக்கு,
அதலாம் அப்படிதான், இனிமேல் வீட்டுக்குளேயே விளையாடு
என்பதே பதிலாய் வந்தது
தனியாய் சென்ற பள்ளிக்கு அன்று முதல்
ஓர் துணை, எதற்கு என்று தெரியாமலே பின் தொடர்ந்தது
என் உடலில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றத்தினால்
பல கழுகு கண்களுக்கு இரை ஆனேன்.
முகம் பார்த்து பேசுபவர்களை விட ,
மார் பார்த்து பேசுபவர்கள் அதிகரித்தனர்
என் பழக்க வழக்கங்கள் கூட என்
உடல் அமைப்பை வைத்தே அனுமானிக்க பட்டது
கல்லூரியை அடைந்த போது கையினில்
ரோஜா மலரோட வேட்டை ஆட தயாராய்
சில ஓநாய்கள், மனதினில் சிறை பிடிக்கும்
முயற்சியில் சில ரோமியோக்கள்.
பேசாவிட்டால் திமிரு
பேசினால் வேசி, தரம் கெட்டவள்
போன்ற பல அவ பெயர்களோட கல்லூரியை
முடித்த உடன், அதுவரை பார்த்த
நான்கு சுவர்களை தவிர்த்து, வேறு
நான்கு சுவர்களின் வண்ணம் அறிய
பெற்றோரின் அடுத்த கட்ட முயற்சி.
கடுமையாய் உழைத்து ஓர் வேலையினில் சேர்ந்தால்
குனிந்து குனிந்தே வேலை நியமனம் பெற்றாள்
என்ற புற முதுகு வசனங்களை தவிர்த்து,
முன்னேற வேண்டும் எனும் முனைப்போடு உழைத்து
பதவி உயர்வு பெற்றால், மீண்டும் புற முதுகர்களின்
வாயினில் நான் அவல்.
வீட்டினை விட்டு வெளியேறியது முதல்
வீட்டினுள் நுழையும் வரை பல கழுகு பார்வைகள்,
உடம்பினில் பல பூரான்கள், காதினுள் பல நாராசங்கள்.
ஓர் வயதினை எட்டிய உடன் எவனோ ஒருவனின்
கைகளில் என் கைகள் திணிக்க பட்டன
அன்று முதல் அவனுக்கு நான் அடிமை
அவன் விருப்பு வெறுப்புகள் உணர்ந்து
நேரத்திற்கு உணவிட்டு, உணவாகி
உயிர் விட்டு, உயிர் கொடுத்து
அவனின் வசைகளுக்கும், முரட்டு தனத்திற்கும்
பொறுமை காத்து, நான் கொடுத்த உயிரினை
முன்னேற்றுவதில் மட்டுமே எனது கவனம்.
நான்கு சுவற்றினில் 15 வயதினில் அடைபட்ட நான்
நான்கு கால்களில் போகும் வரை
நான்கு சுவற்றுகுள்ளே வாழ்ந்து
பல வசைகளுக்கும், கழுகு பார்வைகளுக்கும்
இரை ஆகும் நான்
முண்டாசு கவிஞன் கூற்றின் படி
மா தவம் செய்து பிறந்திட்ட பெண்.
No comments:
Post a Comment